இன்று, அதிகாலையில், உக்ரைன் தலைநகர் கியேவ் மற்றும் கார்கிவ்உள்ளிட்ட பல நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.உக்ரைனில் தற்காலிகமாக நிலவிய அமைதிக்குப் பிறகு தற்போது மீண்டும் தீவிரத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.முன்னதாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 1-ஆம் தேதி வரை கியேவ் நகர் மீதான தாக்குதல்களை நிறுத்த ரஷ்ய அதிபா் புதின் ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியிருந்தது. உக்ரைனில் நிலவும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.ட்ரம்ப் கேட்டுக் கொண்ட ஒரு வார கால அவகாசம் (பிப்ரவரி 1 வரை) முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யா மீண்டும் கியேவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.பிப்ரவரி 3 அன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கியேவில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளது..தாக்குதல்கள் ஒருபுறம் தீவிரமடைந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தகர்த்து, கடும் குளிரில் மக்களைத் துயரத்திற்கு உள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.