தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் மீதான வன்மத்தால் அவரது பெயரை நீக்கிவிட்டு வாயில் நுழையாத வடமொழிப் பெயரை மத்திய பாஜக அரசு திணிப்பதாக முதலமைச்சர் சாடியுள்ளார். இந்தத் திட்டம் நூறு விழுக்காடு மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனிமேல் 60 விழுக்காடுநிதியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி மீதமுள்ள 40 விழுக்காடு நிதியை மாநில அரசுகள் ஏற்கும் படி மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் ,புதிய விதிமுறைகளின்படி குறைவான வறுமை நிலை கொண்ட மாநிலமாக கருதப்பட்டு தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் இதனால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டு உள்ளதாக தகவல்.