
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் கே. பெருமாள் (53). இவர் கடந்த 15-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். பின்னர், இவரது உடல் உறுப்புகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இவரது உடலுக்கு திண்டுக்கல்லில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இவரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் சக்திவேல் கலந்து கொண்டு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.