
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சேர்ந்த சின்னப்பன் (34), ஜான் கென்னடி (35), ரொபர்ட் (32), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமார் (32), அகஸ்டின் பிரபு (26) ஆகிய 6 பேர் புனித வெள்ளியை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள தோமையார் ஆலயத்துக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் வழியாக வேடசந்தூர் நோக்கி ஆம்னி வேனில் வந்தனர். வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே வந்த போது, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து சீத்தமரம் நான்கு வழிச் சாலை நோக்கி வந்த லாரி இவர்களது ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சின்னப்பன், முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜான் கென்னடி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த வேனில் வந்த ரொபர்ட், அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமார், அகஸ்டின் பிரபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டனர்.
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ரொபர்ட், அற்புதராஜ் உள்ளிட்ட 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே, மருத்துவமனையில் ரொபர்ட் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.