
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகரில் நேற்று ஒழுங்கினசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த 17 வயதுடைய சிறுவனை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறுவனின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் ஒழுங்கினசேரி பகுதியில் மது போதையில் ஆட்டோ ஓட்டிய வாலிபருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனம் நிறுத்தியதாக 3 கார் மற்றும் 10 மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 17 நாட்களில் மாநகரில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாது இருத்தல், வாகன சாகசத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் அதிகமாக இருந்தன.