
ஈரோடு கொல்லம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (70). ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இருவரும் வீட்டில் நேற்று மதியம் தனியாக இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென சுப்பிரமணி வீட்டுக்குள் நுழைந்தார். தான் வைத்திருந்த பிளேடால் திடீரென அந்த வாலிபர் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்தார்.
இதில் சுப்பிரமணிக்கு ரத்தம் வெளியே வந்தது. இதைக் கண்டு ஜெயலட்சுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த வட மாநில வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். கழுத்து அறுபட்ட சுப்பிரமணி ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வட மாநில வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராபி ஓரான் (28) என தெரிய வந்தது.
இந்நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபி ஓரான் நேற்று இரவு திடீரென இறந்தார். சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ராபி ஓராணை அடித்தவர்கள் மீது சூரம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ய உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.