
நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரிகோல்டு செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கின. தற்போது பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மயில், வண்ணத்துப்பூச்சி மற்றும் இதய வடிவில் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பச்சை, நீலநிறத்தில் உள்ள செடிகளை நடவு செய்து வருகின்றனர். அங்கு 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இத்தாலியன் பூங்காவில் வளர்ந்த அலங்கார செடிகளை அழகாக வெட்டி ஒருவர் சைக்கிளை ஓட்டி செல்வது போல 3 வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மரங்களுக்கு அடியில் மலர் செடிகள் போதிய அளவு வளராது. இதனால் இலை பூங்காவை பயன்படுத்தும் வகையில் இலை செடிகளை கொண்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது என்றனர்.