
தென்காசியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பெய்த கன மழையானது இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு யானை பாலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை தென்காசி சுவாமி சன்னதி பஜாரி சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் யானை பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றவர் தவறி ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்த தகவல் கேள்விப்பட்டு உடனடியாக அங்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளம் அதிகமாக இருப்பதால் குளிப்பதற்கோ, தர்ப்பணம் செய்வதற்கோ யாரும் வரக்கூடாது என காவல் துறையினர் சார்பில் காவல் ஆய்வாளர் கற்பகராஜ், தனிபிரிவு தலைமை காவலர் முத்துராஜ், முத்துப்பாண்டி, காவலர் பாலமுருகன் ஆகியோர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.