Advertiment

அனைத்து கோவில்களிலும் இலையில் அன்னதானம்

by Editor

ஆன்மீகம்
 அனைத்து கோவில்களிலும் இலையில் அன்னதானம்



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி (20 ந் தேதி) முதல் அனைத்து கோவில்களிலும் அன்னதானம் வழக்கம்போல அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாறப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த 16.9.2021 அன்று, முதலமைச்சர், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில் ஆகிய மூன்று திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த நடைமுறையினை மாற்றி பின்வரும் முறையில் அன்னதானம் திருக்கோவில்களில் இன்று முதல் (20 ந் தேதி) வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் திருக்கோவில்களிலும் அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப்பொட்ட லங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியிருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 754 கோவில்களில் தரிசனத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு  வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது. சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்தர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தின்கீழ் வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது.

Share via

More Stories