
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை முன்னிட்டு, பெட்டிங்கும் சூடு பிடித்துள்ளது. இந்திய அணிதான் புக்கிகளுக்கு சாதகமான அணியாக கருதப்படுகிறது. இந்திய அணி மீது கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி வரை மதிப்புள்ள பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சூதாட்ட கும்பல்களில் பலர் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு கொண்டவர்கள். ஒவ்வொரு பெரிய போட்டியின் போதும் உலகம் முழுவதிலுமிருந்து முக்கியமான சூதாட்ட கும்பல்கள் துபாயில் கூடுவதாகவும் தகவல் உள்ளது. தாவூத் இப்ராஹிமின் கும்பலான 'டி கம்பெனி' துபாயில் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியிலும் இருவர் கசூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து, பிரவீன் கோச்சார், சஞ்சய் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடத்தில் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதி போட்டியின் போது, இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் லைவ் பெட்டிங்கில் ஈடுபட்ட போதே போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளனர். பெட்டிங் நடத்துவதற்கு என்றே டெல்லியில் மாதம் 35 ஆயிரம் வாடகையில் வீடு பிடித்துள்ளனர். ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் கமிஷனாக பெற்றுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் நெட்வொர்க் துபாயில் இருந்தே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.