Advertiment

ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  திருக்கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு  சீர்வரிசை

by Editor

ஆன்மீகம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  திருக்கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு  சீர்வரிசை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. 
மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்புக் கோவிலாக இருந்து வருகிறது.
இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம்.


இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர்.  இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டுவஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.அதேபோல உத்தமர் கோவில் சௌந்தர்யா பார்வதி உடனுறை சோமாஸ்கந்தருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் பட்டுப்புடவைகள் அடங்கிய மங்களப் பொருட்கள் சீராக வழங்கப்பட்டது.

Share via

More Stories