
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்கள் அருவியில் ஆசைதீர குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, புல்வெளி தோட்டம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.
பின்னர், அவர்கள் அருவியின் மேல் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் உற்சாகமாக படகு சவாரி செய்து கோதையாற்றின் அழகை கண்டு ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அருவிப்பகுதி குளு குளுவென இருந்தது.
தற்போது மண்டல, மகர விளக்கு சீசன் என்பதால் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திற்பரப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் அருவியில் குளித்து விட்டு அருகில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.