
தென் தமிழகத்தில் மதுரை முக்கிய ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதில், பார்ப்போர் வியக்கும் கட்டிடக் கலையும், பாரம்பரியத்தையும் கொண்ட திருமலை நாயக்கர் அரண்மனை முக்கியமானது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிக அளவு திருமலை நாயக்கர் மகாலை சுற்றிப் பார்க்க வருவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள இந்த அரண்மனை திராவிட இஸ்லாமி. கூட்டு கட்டடக் கலையில் உருவாக்கப்பட்டு இன்றுவரை மிகவும் அழகாக கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.
திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட மற்றும் ஐரோப்பிய பாணியின் அடிப்படையில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்குப் பெயர்பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19அடி. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படங்கள், திருமணம் மற்றும் விளம்பரங்கள் தொடர்பான போட்டோ சூட் அனுமதியின்றி நடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் பெரும்படங்கள், குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாகத் தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.