Advertiment

சபரிமலையில் அதிகரித்துவரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

by Editor

ஆன்மீகம்
சபரிமலையில் அதிகரித்துவரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.


கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலமான தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து இருமுடிக்கட்டி  வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சாமி தரிசனம் மட்டுமின்றி 56 வகையான வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக படிபூஜைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டணமும், குறைந்தபட்சமாக நெய்யாபிஷேகத்திற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.மேலும் தினமும் படி பூஜைகள் நடத்தபட்டு வருகின்றன.

இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பாரம்பரியமிக்க "பறை நிறைத்தல்" வழிபாடு நடந்து வருகிறது.  சுவாமி ஐயப்பனுக்கு படைத்து  பூஜிக்கப்பட்ட நெல்மணிகளை நம்பூதிரிகள் வெளியில் கொண்டுவந்து ஒரு தாம்பாளத்தில் வைத்திருப்பர். மீண்டும் அங்கு  விளக்கேற்றி பூஜிக்கப்படும்  அந்த நெல்மணிகள் பக்தர்களை கொண்டு இருகரம் இணைத்து ஒரு கரமாக்கி மூன்று முறை அந்த மரக்காலில் இடுவர். அதன் பின் தாம்பளத்தில் இருக்கும் நெல்மணிகள் நம்பூதிரிகளால் மரக்காலில் நிறைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

பறை நிறைதல் வழிபாட்டில் மரக்காலில் நெல்மணிகளை நிறைக்கும்போது, சர்வ பிரச்சினைகளும் தீர்ந்து பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது சபரிமலை ஐதீகமாக உள்ளது.

சபரிமலையில்  தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பறை நிறைதல் வழிபாட்டிற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பறை வழிபாட்டில் பங்கேற்று வருகின்றனர். பறைவழிபாட்டிற்கு தேவசம் போர்டு சார்பில் பக்தர் ஒருவருக்கு 200 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share via