
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி கிராமம். இந்தத் தலத்தில் காவிரி நதியின் கிளை நதியான கொள்ளிடம் ஆறு உத்தரவாகினியாகப் பாய்வதால், காசிக்கு நிகரான புனிதம் பெறுகிறது. இந்தத் திருத்தலத்துக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் விஜயம் செய்திருக்கிறார். மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் இத்தலத்து பெருமாளையும், பிராட்டியையும் பூஜித்திருக்கிறார்.
இத்திருக்கோயிலின் கோபுரம் சிறியதுதான். கீர்த்தி மிகப்பெரிது. திருக்கோயிலின் உள் நுழைந்தவுடன் வலப்புறம் ஸ்ரீமகா கணபதியும், இடதுபுறம் ஸ்ரீ ஆஞ்சனேயரும் காட்சிதருகிறார்கள். அவர்களைத் தரிசித்து உள்ளே சென்றால் இடதுபுறம் செல்வத்திற்கதிபதியான ஸ்ரீ குபேரரை தரிசிக்கலாம்.
அதற்கடுத்து மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் அதற்கெதிரில் ஸ்ரீ சுப்ரமண்யரும் சன்னிதி கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஆசிபெற்று உள்ளே சென்றால் இடது புறம் ஸ்ரீவிட்டலர் ஸ்ரீ ருக்மாயியுடன் காட்சி தருகிறார். அவர்களுக்கருகில் பரமபத வாசல் அலங்காரமாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் இத்தலத்தில் அருளாட்சி நடத்தி வரும் ஸ்ரீவேங்கடநாதன் ஸ்ரீ பத்மாவதி தாயாருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பெருமானைத்தான் கும்பகோணத்தில் வசித்து வந்தபோது ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதித்திருக்கிறார். அவர்களுக்கெதிரில் கருடபகவான் காட்சி தருகிறார்.
பெருமாள் தன் இடது கரத்தில் ஏந்தியுள்ள சங்கில் ஸ்ரீ வலம்புரி விநாயகரும், அவரது வலது தோளில் முருகப்பெருமானின் வேலும் காட்சி தருகின்றனர். அவரின் நாபியில் உள்ள ஸ்ரீராகவேந்திரரின் உருவை, அபிஷேக்தின் போது மட்டுமே காணமுடியும். இறைவனின் அருளாடல்களை அதில் தோய்ந்து நினைக்கையில் வருவது பரமானந்தமல்லவா? அந்த ஆனந்தத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டாமா? வாருங்கள் சித்தமல்லிக்கு! பெருமாளின் அருளாடலுடன் மந்த்ராலய மகானையும் தரிசிக்கலாம்.
அதுமட்டுமல்ல. அந்த மகானின் அருளாசியுடன் விளங்கும் கோசாலையையும் காணலாம். கோசாலை அமைய அந்த மகான் புரிந்த லீலைகள் ஏராளம். எல்லாவற்றையும் இங்கு குறிப்பிட இயலவில்லை. கோசாலைக்கு உங்கள் உதவிக் கரத்தையையும் நீட்டலாம்!