
நடிகர் அஜித் கடந்த ஆண்டு தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனைக்குள் நுழையும் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த விடியோவை எடுத்தவர் மருத்துவமனை ஊழியரும் அஜித்தின் ரசிகையுமான ஃபர்சானா என்று தெரியவந்தது .
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் அவர் அஜித்துடன் இணைந்து செல்பியும் எடுத்துக்கொண்டார்.
சமூகவலைத்தளங்களில் விடியோ வெளியானதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த மருத்துவமனை நிர்வாகம், ஃபர்சானாவைப் பணியிடை நீக்கம் செய்தது.
இதையடுத்து அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ஃபர்சானா உதவி கோரினார். ஷாலினியின் பரிந்துரையால் ஃபர்சானாவுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. எனினும் சில நாள்களில் ஃபர்சானா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அஜித்தை நேரில் சந்திக்க உதவும்படி அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் உதவி கோரினார் ஃபர்சானா.இந்நிலையில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஃபர்சானா. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என அறியப்படுகிறது.