Advertiment

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்

by Editor

கல்வி
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்

 

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை வழங்கும் பிரத்யேக மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்தார்.

நீட்தேர்வு அச்சத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து, நேற்று அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் இன்று காலை வேலூரைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நீட் தேர்வை எழுத பயந்தும் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்திலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்கள் தங்களது உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.

நீட் தேர்வால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருவதற்காக 104 பிரத்யேக மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் 104 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி நண்பர்களாக பழகி இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டி.எம்.எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை வழங்கும் 104 சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்தார்.

நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு அவர் கவுன்சிலிங் அளித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடத்தில் நம்பிக்கை தரும் வகையில் இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வு எழுதிய மாணவர்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 12 ந்தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, எதிர்பார்த்ததை விட கூடுதலாக மொத்தம் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால், தமிழகம் முழுவதும் 17 ந்தேதி நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19 ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share via

More Stories