Advertiment

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி-பக்தர்கள் இல்லை

by Editor

ஆன்மீகம்
 வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி-பக்தர்கள் இல்லை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்த பின்னர் கொடி ஏற்றப்பட்டது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னை பெரிய தேரில் எழுந்தருள, பெரிய தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருள, தேர்பவனி பேராலயத்தை சுற்றிலும் வலம் வந்தது.

வழக்கமாக பெரிய தேர் பவனி நடைபெறும்போது, பேராலயத்தில் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், அன்னையே வாழ்க, அன்னை மரியே வாழ்க என கோஷமிடுவார்கள். ஆனால், விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பெரிய தேர் பவனி அமைதியாக நடைபெற்றது.

இந்த விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் மற்றும் அருட் சகோதரர்கள், சகோதரிகள் கலந்துகொண்டனர். மாவட்ட எஸ்பி ஜவஹர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (செப்.8) மாலை புனித கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.

Share via