Advertiment

தமிழகத்தில் அமையும் உலகின் உயரமான நந்தி சிலை

by Editor

ஆன்மீகம்
தமிழகத்தில் அமையும் உலகின் உயரமான நந்தி சிலை

 சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் உலகத்திலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமிபூஜையுடன் 2021ஜனவரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வாழப்பாடியில் வசித்துவரும் சிவபக்தர் ராஜவேல், மற்ற சிவ பக்தா்களின் ஆதரவுடன் இராஜலிங்கேஷ்வா் சிவன் ஆலயம் மற்றும் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைத்து வருகிறார்.

இந்த சிலையை மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி தியாகராஜன் வடிவமைத்து வருகிறார். அவருடன் அவரது குழுவும் இணைந்து இரவு பகலாக பணிபுரிந்து வருகிறது. இதற்காக உயரமான இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு நந்தி வடிவில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நான்கு அடி உயரத்தில் ஒரு மாதிரி நந்தி உருவாக்கப்பட்டு அதன் பாகங்களை அளவெடுத்து பத்து மடங்கு அளவாக மாற்றி கம்பிகளை வளைத்து கம்பி கட்டும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ராஜவேல் விடுத்த செய்திக்குறிப்பில் ' சேலத்தில் வெள்ளாளகுண்டம் பகுதியில் உலகத்திலேயே பெரிய நந்தியாக இந்த ' அதிகார நந்தி' 45 அடி உயரத்தில் அமைக்கும் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கேரளாவில் 31 அடியில் உள்ள நந்தி சிலையை மிஞ்சும் வகையில் 45 அடி உயரத்தில் அதிகார நந்தி அமைக்கப்பட்டு வருகிறது. எல்லாம் வல்ல இறைவன் சிவன் என்னுடைய கனவில் வந்து இந்தப் பகுதியில் பிரமாண்ட முறையில் தனக்கு கோயில் அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 2022 பிப்ரவரி மாதத்தில் பணிகள் முழுமையாக முடிவடைந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் கும்பாபிஷேகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Share via