தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதப்பிறப்புகளும் சிறப்பு வாய்ந்த மாதப்பிறப்புகளாக கருதப்படுகிறது.குறிப்பாக ஆடி மாதம் அம்மன் திருக்கோயிலிலும், புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களிலும்,மார்கழி மாதம் அனைத்து திருக்கோயிலிலும் பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதப்பிறப்பு இன்று பிறந்ததையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடபகுதியில், மாட வீதியில் குபேர வடிவில் வீற்றிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசியை ஒட்டி இன்று அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு
பாமா ருக்மணி சமேத உற்சவர் மற்றும் மூலவருக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர்,பஞ்சாமிர்தம் ,தேன் , செஞ்சந்தனம், துளசி பொடி, மகிழம்பூ பொடி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ பொடி, வாசனை போஷ்ட்ட பொடி உள்ளிட்ட பல்வேறுவகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு வண்ண வண்ண மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு, துளசி மாலை அணிவித்து பஞ்ச கற்பூர ஆரத்தியும் நட்சத்திர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் ஏகாதசி தினமான இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குபேர வடிவிலான பூத நாராயண பெருமாளை வழிபட்டனர்.