Advertiment

 நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

by Staff

ஆன்மீகம்
 நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் 519-வது ஆண்டு ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த ஜூன் 30, 2025 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த ஆனிப் பெருந்திருவிழா, திருநெல்வேலி மாநகரையே விழாக்கோலமாக்கியது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சரியாக காலை 7:30 மணியளவில் மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கம்பீரமான கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, கடந்த ஏழு நாட்களாக தினமும் இரவு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனம், யானை வாகனம் உட்படப் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வீதி உலாக்கள் பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.

 
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள் அந்தந்த தேர்களில் எழுந்தருளினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்  அப்பாவு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு, காங்கிரஸ் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்  ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர்  சுகுமார் உட்படப் பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நெல்லையப்பருக்கான பெரிய தேர், அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கான சிறிய தேர்கள் என மொத்தம் 5 தேர்கள் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் வலம் வந்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் "ஓம் நமச்சிவாய" கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


கடந்த ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது, தேரின் வடம் பலமுறை அறுந்ததால் தேர் இழுப்பதில் தாமதம் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. இந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பிரத்தியேகமாகப் புதிய மற்றும் பலமான வடங்கள் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதனால் எந்தவித இடையூறும் இன்றி தேரோட்டம் சுமூகமாக நடைபெற்றது.


தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர், மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோட்ட பாதுகாப்புக்காக 3 ட்ரோன் கேமராக்கள், CCTV கேமரா வாகனங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கோயில் உட்புறமும், வெளிப்புறமும் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டன.மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு வெடிகுண்டு தடுப்பு சோதனைகளும் நடத்தப்பட்டன.

குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, குற்றப்பிரிவு காவலர்களைக் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒலிப்பெருக்கிகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நான்கு ரதவீதிகளிலும் இரண்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், 16 காவல் உதவி மையங்கள் ('May I Help You') அமைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும், காவல்துறைக்குத் தேவையான விவரங்களை அளிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. அவசர உதவிக்கு 100, 0462-2562651, 9498101726 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டன. 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக்குழு மற்றும் நடமாடும் கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள், மற்றும் சாதித் தலைவர்கள் குறித்த கோஷங்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தேரோட்டத்தின்போது அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டது.


தேரோட்டத்தையொட்டி, திருநெல்வேலியில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், மானூர், ஆலங்குளம், தென்காசி, அம்பை, பாபநாசம் மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. அவசரகால வாகனங்களுக்கு மட்டும் சில குறிப்பிட்ட வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
 

Share via