Advertiment

 பாதரசலிங்கம் உடைய திருமுல்லைவாயில்  அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் :

by Editor

ஆன்மீகம்
 பாதரசலிங்கம் உடைய திருமுல்லைவாயில்  அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் :

 

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் சென்னையில் அமைந்துள்ளது.


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார்.


இத்தலத்தில் உள்ள மூலவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால் சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது.சுவாமியே பிரதானம் என்பதால் நவகிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு.இத்தலத்து விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருளுகிறார்.இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்" உள்ளன.தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அம்பாள் சன்னிதி சுவாமிக்கு வலப்புறமாக உள்ளது.


வைகாசி பிரம்மோற்சவம், மாசி தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம் போன்றவை கொண்டாடப்படுகிறது.
பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

Share via