கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட நடிகை சரண்யா சசி 1988ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னையிலே வளர்ந்த அவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்திருந்தாலும், கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் நிறைவு செய்தார். கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் நிறைவு செய்த நடிகை சரண்யாசசி மலையாளத்தில் ஒளிபரப்பான சூர்யோதயம் என்ற தொடர் மூலம் சின்னத்திரையினில் அறிமுகமானார். தமிழில் "பச்சை என்கிற காத்து" என்ற திரைப்படம் மூலம் திரையுலகினில் அறிமுகமானார். மேலும், மலையாளத்திலும் "சாக்கோ ரந்தமன்" என்ற படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார்.
திரையுலகில் பரப்பாக இருந்த நடிகை சரண்யா சசிவிற்கு தொடக்கத்தில் அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. அவர் அலட்சியமாக அதை கவனிக்காமல் இருந்துள்ளார்.பின்னர், தலைவலி மிக கடுமையாக வரத்தொடங்கிய பிறகு 2012ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார், மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு மூளைப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மூளைப்புற்றுநோயுடன் போராடிய அவர் மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தார். அவருக்கு அவரது நண்பர்களும், திரைத்துறையினரும் உதவி செய்தனர்.
35 வயதே ஆன நடிகை சசிக்கு மூளைப்புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகு, 11 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நடிகை சரண்யா சசி, கொரோனாவில் இருந்து மீண்டு சில தினங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார்.
ஆனால், வீடு திரும்பிய அவருக்கு ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்ததாலும், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாலும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள மந்தரகொடி, ஹரிசந்தனம், சீதா ஆகிய தொடர்கள் அந்த மாநில ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும், அவர் சோட்டா மும்பை, தாளப்பாவூ, பாம்பே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். உயிரிழந்த சரண்யாசசிவிற்கு பினுசேவியர் என்பவருடன் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.