
2012ம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனிநீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.இதனிடையே, தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அத்தீர்ப்பிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறையின் உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. பின்னர், நடிகர் விஜயின் வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணை வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.