
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை தரிசனம் செய்தனர்
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாக்களில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தரசா திருவிழா. இங்கு தசரா 10 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை துவங்கினர். விழா நாட்களில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்வு நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வேடமனிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல்செய்து கோவிலில் செலுத்துவது இக்கோவிலின் தனிசிறப்பாகும். இதையொட்டி கடந்த நான்கு தினங்களாக வேடமனிந்த பக்தர்கள் குலசை சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்து வந்தனர். விழாவின் சிகரநாளான இன்று (24.10.2023) வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் பக்தியுடன் செலுத்தினர். இதே போல காளி வேடம் அணிந்த பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்து ஆடி காணிக்கை செலுத்திய பின்னர் கோவில் கடற்கரையில் சென்று அக்னி சட்டியை இறக்கி தங்களது நேர்ச்சை நிறைவு செய்தனர்.
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.இதையொட்டி இரவு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மஹிஷா சூரமர்தினீ கோலத்தில் கடற்கரைக்கு எழுந்தருளினார். மக்கள் வெள்ளத்தில் கடற்கரைக்கு வந்த அம்மன் முதலில் தன் முகத்துடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருவம் மாறிய மகிசாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து எருமை உருவம் பெற்றவனையும் வதம் செய்தார். முடிவில், சேவல் உருவமாக மாறிய மகிசாசூரனையும் அம்மன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக்காண சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் குவிந்திருந்தனர்.