
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று புதன்கிழமை காலை 10.56 மணிக்கு தொடங்கி நாளை வியாழக்கிழமை காலை 7.06 மணி வரை உள்ள நிலையில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
குறிப்பாக இன்று மாலை முதல் உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள திருவண்ணாமலையில் குவிந்தனர்.ஒவ்வொரு பௌர்ணமி கிரிவலம் அன்றும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களிடையே சிறுதானிய உணவு வகைகள் மற்றும் சிறுதானிய உணவுகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய ஆண்டையொட்டி சிறு தானிய உணவு வகைகளால் உருவாக்கப்பட்ட சாமை கிச்சடி, குதிரை வாலி பொங்கல், வரகு தயிர் சாதம், சாமை பிரியாணி, ராகி அல்வா, தினை கஞ்சி, வரகு சாம்பார் சாதம், வரகு புளியோதரை, குதிரைவாலி வெண்பொங்கல் உள்ளிட்ட சிறு தானிய உணவு வகைகளால் செய்யப்பட்ட உணவுகளை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 14 தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சிறு தானிய உணவு வகைகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு வழங்கினர்.