Advertiment

நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு:

by Editor

சினிமா
 நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு:



நடிகர் விஜய் மேல் முறையீட்டு விசாரணை மனுவை  ஒத்திவைக்க  உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.


தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர். இச்சூழலில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்பிக்குமாறு கூறி விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share via

More Stories