
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் 400 பழங்குடியினக் குடும்பங்களுக்கு பிரபல நடிகர் ராணா டகுபதி உதவி செய்துள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
தொடர் ஊரடங்கால் தினக்கூலிப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் வாடுகின்றனர். எனினும் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி 400 பழங்குடியினக் குடும்பங்களுக்கு உதவியுள்ளார். அங்குள்ள நிர்மல் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடியின மக்களைத் தேடிச் சென்று உதவியுள்ளார். இந்தத் கொரோனா காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வழியில்லாமல் தவித்துவரும் அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் மளிகைப் பொருட்களையும், மருந்துகளையும் ராணா வாங்கிக் கொடுத்துள்ளார்.
அல்லாம்பள்ளி மற்றும் பாபா நாயக் ரண்டாக்ரம் பஞ்சாயத்து, குர்ரம் மதிரா, பாலாரேகடி, அட்டால திம்மாபூர் உள்ளிட்ட 9 பகுதிகளுக்கு ராணா உதவி அளித்துள்ளார். ராணா நடிப்பில் 'விராட பருவம்' திரைப்படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து 'அய்யப்பனும் கோஷியும்' மலையாளப் படத்தின் அதிகாரபூர்வ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கிறார்.