
லட்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து கூறிய பிரபல நடிகை மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு விவகாரம் குறித்து பெரும் பரபரப்புடன் பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பேசி வருகின்றனர் . இந்த நிலையில் லட்சத்தீவுக்கு நிர்வாகியாக பிரஃபுல் படேல் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சீர்திருத்தம் என்ற பெயரில் மாட்டிறைச்சிக்கு தடை, மது பானங்களுக்கு தடை, பள்ளிகளில் இறைச்சிக்கு தடை உட்பட பலர் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரைப்பட நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா என்பவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசியபோது ’ மத்திய அரசால் லட்சத்தீவிற்கு அனுப்பப்பட்ட பயோ வெப்பன் தான் பிரஃபுல் படேல் என்று கூறியிருந்தார். ஆயிஷா சுல்தானாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஆகியுள்ள நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆயிஷா சுல்தான் மீது தேசத்துரோக வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து விளக்கமளித்த ஆயிஷா சுல்தான், மத்திய அரசால் அனுப்பப்பட்ட பிரஃபுல் படேல் அவர்களை பயோவெப்பன் போல் உபயோகிப்பது என்று குறிப்பிட்டு பேசியது நாட்டையும் அரசாங்கத்தையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.