
பேரிடர்க் காலத்தில் தற்காலிக ஏற்பாடான பள்ளிக் கல்வி ஆணையரே இயக்குநராக உள்ள நியமன விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''உள்ளூர் வேலைக்கான திறன் தேவைகளில் (local skilling needs) ஒரு வேலைக்கான திறனை, குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே ஒரு மாணவர் பயில வேண்டும். எட்டாம் வகுப்பு முடிக்கும்போதே அத்தகைய ஒரு வேலையில் ஆர்வமும், திறனும் பெறும் வகையில் பத்து பள்ளி வேலை நாட்கள், உள்ளூரில் அத்தகைய வேலை நடக்கும் இடத்திற்கே சென்று 13 வயதிற்கு உட்பட்ட குழந்தை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது.
அனைவருக்கும் அனைத்திலும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிராக, அரசுப் பள்ளிகளில் எந்தெந்தப் பள்ளிகளில் குறைந்த மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பில் போதாமை இவ்வாறான பலவீனங்கள் உள்ளனவோ அப்பள்ளிகளை இணைத்து, பள்ளி வளாகம் (school complex) உருவாக்கி, வளமைகளைப் (sharing the resources) பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
அதாவது, அனைத்து வளங்களும் உள்ள பள்ளிகளும் இருக்கும், வளங்கள் குறைவாக இருக்கும் பள்ளிகளில் வளங்களைப் பகிர்ந்து பயன்படுத்தப்படும் வகைப் பள்ளிகளும் இருக்கும். ஆனால், இவ்விரண்டு வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கற்றல் திறன் வெளிப்பாடு மதிப்பிடுவதற்கு ஒரே அளவுகோல் (National Bench Mark for Assessment of Learning Outcome).
சமமற்ற வாய்ப்பு அளித்து, சமமான போட்டி என்பது மாணவர்களை எத்துணை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்; ஆசிரியர்களுக்கு எத்துணை சவாலைகளை முன்வைக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.
சமமான கற்றல் வாய்ப்பு இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கவலைப்படாமல் குழந்தைகளுக்கு மேலும் மேலும் சவால்கள் கூடிக் கொண்டே போகும் வகையில் இரண்டிற்கும் மேற்பட்ட மொழிப் படங்களைக் கற்க, கட்டாயப்படுத்துவது நியாயமற்ற அணுகுமுறை. சமஸ்கிருத ஒற்றைப் பண்பாட்டுத் தேசியத்தைக் கட்டமைக்கும் சூழ்ச்சி நிறைந்த தேசியக் கல்விக் கொள்கை, கல்வியை வணிகச் சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்கிறது.
தேசியக் கல்விக் கொள்கை
அரசுக் கல்வி நிறுவனங்களைப் பலவீனப்படுத்தி, தனியார் கல்வி நிலையங்கள், அதிலும் உள்நாட்டவர் மட்டுமல்லாமல் வெளி நாட்டவரும் சந்தைக்குள் நுழைந்து சுயநிதிக் கல்வி நிலையங்களைத் தொடங்கி, தங்களின் செலவிற்கு ஈடாகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளவும், உருவாகும் உபரித் தொகையை எந்த இடத்திலும் வேறு கல்வி நிறுவனங்கள் திறக்க முதலீடு செய்யவும் வழி செய்கிறது தேசியக் கல்விக் கொள்கை.
கட்டண வசூலில் பலவகைக் கட்டுப்பாடுகள் உள்ள தற்போதைய சூழலிலேயே கல்விக் கட்டணம் கட்டப் பரிதவிக்கும் பெற்றோர்கள், இனி தனியார் தீர்மானிப்பதுதான் கட்டணம் என்ற நிலை உருவானால் எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
இதுபோலப் பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளதால்தான், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கல்விக் கொள்கையை உரிய முறையில் முழுமையான விவாதத்திற்கு உட்படுத்த முன்வரவில்லை. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை மற்றும் அமைச்சரவையின் விவாதத்திற்கு உட்படுத்தாமலேயே, நேரடியாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசுகள் செயல்படும் வகையில் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் அழைத்துப் பேசுகிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மக்களாட்சி மாண்பிற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக, மாநில அரசின் உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள வழி செய்யும் தேசியக் கல்விக் கொள்கை விளைவிக்க இருக்கும் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். 2021- 2022 கல்வி ஆண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சமமான கற்றல் வாய்ப்பு
கல்வி ஆண்டு தொடங்குகின்ற இந்தச் சூழலில் நம் கவனம் நமது மாநிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூகநீதியின் அடிப்படையிலான அரசுக் கல்வி நிலையங்களை வலுப்படுத்துவதிலேயே இருக்க வேண்டும். சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும்.
நோய்த் தொற்று ஏற்படுத்தி இருக்கும் பேரிடர் ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கில் தினந்தோறும் மக்கள் மடிவதைப் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் இயக்குநர் பொறுப்பு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையைச் சுற்றியே நமது விவாதம் அமைவது சிக்கல்களைத் தீர்க்க உதவாது.
இயக்குநர் பணி ஆணையர் பணியாக உருமாற்றம் பெற்றுள்ளதாகத் தனியாக எந்த அரசாணையும் வெளியிடப் படவில்லை. எனவே, இது தற்காலிக ஏற்பாடு என்பதை நன்கு உணர முடிகிறது. பள்ளிக் கல்வி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளவர் மாணவர்களை நேசிக்கக் கூடியவர். ஆசிரியர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று தமிழ் வழியில் ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதித் தேர்ந்தேடுக்கப்பட்டவர்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்ற குறள் வழியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் குறிப்பிட்ட பணி முடிக்க, அவர் அரசால் பணிக்கப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது
பேரிடர்க் காலம் முடிந்த பிறகு
புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பேரிடர்க் காலப் பணிகளைச் சிறப்பாகச் செய்யட்டும். பேரிடர்க் காலம் முடிந்த பிறகு அரசிடம் பேசலாம். பழைய நிலைக்குப் பள்ளிக் கல்வி அமைப்பு திரும்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தலாம். பேரிடர்க் காலத்தைக் கடந்தபின், இயல்பு நிலை திரும்பியதும் முதல்வர் நிச்சயம் ஆசிரியர் இயக்கங்களை அழைத்துப் பேசி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவை எடுப்பார் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
அதுவரை பொறுமை காத்து, பள்ளிக் கல்வித்துறையில் உடனடியாக நடக்க வேண்டிய பணிகள் எந்தச் சுணக்கமுமின்றி நடைபெற, பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக் கொள்கிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு மேலும் சிறக்க மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வழி செய்ய மாநிலக் கல்வி ஆணையம் அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை அனைவரும் இணைந்து வற்புறுத்துவோம்''. இவ்வாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது