Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க - தொகுப்பு.

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
கோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க - தொகுப்பு.

குளியல்

வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

கற்றாழை கூழ் அல்லது எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம். நீரோட்டம் உள்ள ஆறுகளில் குளித்து, வேனிற் காலத்தில் உற்சாகமாக கடக்கலாம் 

வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவு முறை தவறாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

 வெயிலை சமாளிக்கும் பழங்கள்

பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர் விக்கும் பானங்கள்.

மண்பானை மகத்துவம்

வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தனர்.. நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்தது  குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம்.

மரங்களின் தாலாட்டு

மதிய நேரங்களில் வாய்ப்பிருந்தால் மரங்களின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவது உடல் மற்றும் மனதுக்கு இதம் தரும். அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். வேனிற் காலத்தில் மெத்தையையும் தவிர்க்கலாம். வீட்டில் ஜன்னலைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டத்தை உண்டாக்குவதும் அவசியம்.
 
ஆடையில் அக்கறை

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. அதிலும் மகாத்மா முன்மொழிந்த கதர் ஆடைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்.

 
வாசனைப் பொருட்கள்

வியர்வை நாற்றத்தைத் தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள், சந்தைகளில் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவை தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

வியர்வை நாற்றத்தைத் தடுக்கச் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாகச் சந்தனச் சாந்து, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டத் துவைக்கும்போது, சில வகை திரவங்களைச் சேர்ப்பதுபோல, முற்காலத்தில் அகிற் புகையூட்டி ஆடைகளுக்கு நறுமணம் சேர்த்ததாக `மதுரைக் காஞ்சி’ நூல் குறிப்பிடுகிறது. கூந்தலுக்கும் உடலுக்கும் மணமூட்ட அகிற்கட்டை புகையைச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

Share via