
உலகின் மிகப்பெரிய பிரச்னை, சுற்றுச்சூழல் சீர்கேடு. காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள். சில வளர்ந்த நாடுகளில் நான்கு சக்கர வாகனம் வாங்குவதே கடினம்.
ஆனால், இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் என்கிற அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை தாறுமாறாக பெருகியிருக்கிறது. கொரோனா பேரிடர் சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டிருந்ததால், டெல்லி போன்ற மாநிலங்களில் காற்று மாசு குறைந்து காணப்பட்டது.
தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், இந்தியாவில் மீண்டும் காற்று மாசு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக டெல்லியில், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்க தகுதியில்லாத அளவுக்கு மாசடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு உலகின் 199 நாடுகளில் காற்று மாசு காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த தரவுகளை ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தான் காற்று மாசுக்கு அதிக மக்களை பலிகொடுத்துள்ளன. சீனாவில் 2019ம் ஆண்டு காற்று மாசு காரணமாக மட்டும் 14 லட்சத்து 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. அதாவது 2019இல் 9 லட்சத்து 79 ஆயிரத்து 700 பேர் இந்தியாவில் காற்றுமாசு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். 1 லட்சத்து 14 ஆயிரம் உயிரிழப்புகளுடன் பாகிஸ்தான் 3ஆம் இடத்திலும், 1 லட்சத்து 6 ஆயிரம் இறப்புகளுடன் இந்தோனேஷியா 4ஆம் இடத்திலும் உள்ளன.
எகிப்தில் 90 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் வங்கதேசத்தில் 74 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 73,900 பேரும், நைஜீரியாவில் 68,500 பேரும் காற்று மாசு காரணமாக இறந்துதிருப்பது தெரியவந்துள்ளது.