
நுரையீரல்களிலிருந்து உடலின் பல்வேறு உயிரணுக்களுக்கு சீரான ஆக்சிஜன் விநியோகம் அவசியம். சுவாச பாதிப்பான கோவிட் 19, நமது நுரையீரல்களில் பாதிப்பை ஏற்படுத்தி ஆக்சிஜன் அளவை குறைக்கும். அதுபோன்ற தருணத்தில், மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜன் பயன்படுத்தி, நமது ஆக்சிஜன் அளவை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கு உதவும் கருவிதான் ஆக்சிஜன் செறிவூட்டி.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 90 சதவிகிதத்திற்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மருத்துவ அவசர நிலையாக அது கருதப்படும்.
வளிமண்டல காற்றில் சராசரியாக 78 சதவிகித நைட்ரஜனும், 21 சதவிகித ஆக்சிஜனும் இருக்கும். பெயருக்கு ஏற்றவாறு ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, நைட்ரஜனை வடிகட்டி, ஆக்சிஜனின் செறிவுத்தன்மையை அதிகப்படுத்தும். ஆக்சிஜன் சிலிண்டர்களின் பணியை, குழாய்கள் அல்லது ஆக்சிஜன் கவசங்களின் மூலம், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மேற்கொள்ளும்.
சிலிண்டர்களில் அவ்வபோது ஆக்சிஜன் நிரப்பப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் தொடர்ந்து இயங்கும் தன்மை உடையவை.நிமிடத்திற்கு அதிகபட்சமாக 5 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும், கோவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் ஆக்சிஜன் தேவை ஏற்படும் நோயாளிகளிக்கும் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
"எனினும் பொதுமக்கள் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை தாங்களாகவே கட்டாயம் பயன்படுத்தக்கூடாது" என்று பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இணைய கருத்தரங்கில் பெங்களூரு புனித ஜான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கோவிட் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சைதன்யா ஹெச்.பாலகிருஷ்ணன் எச்சரித்தார்."கோவிட் 19 தொற்றின் காரணமாக மிதமான நிமோனியாவால், ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அந்த நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டி உதவிகரமாக இருக்கும் என்றும், போதிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனை பயன்படுத்துவது மிகவும் ஆபத்து" என்றும் அவர் கூறினார்.